Categories

அரூர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பூஜை நேர மாற்றத்தால் பரபரப்பு



தருமபுரி, அக்.18-

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 34 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜைக்கு முந்தைய நாளன்று காலை 10 மணி முதல் 12 மணிக்குள் பூஜை செய்துவிட்டு செல்வது வழக்கமாகும்.

இந்த ஆண்டும் வழக்கம்போல் பூஜை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போதுள்ள செயலாளர் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட்டம் கூட்டி, மதியம் 1.15 மணிக்குத்தான் பூஜை நடத்தப்படும் என்றும், 3 மணிக்குத்தான் ஆலையை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

நிர்வாகத்தின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செயலாளரின் ஆணவப்போக்கு, அதிகாரப்போக்கு மற்றும் பிடிவாதப்போக்கு காரணமாக தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே தகவல் தொடர்பு இடைவெளி ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆலை நிர்வாகம் தொழிற்சங்கத்தினரையும், தொழிலாளர்களையும் மதிக்காமல் அலட்சியமாக செயல்படுவதைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுப்பிரமணிய சிவா நிர்வாகத்தைக் கண்டித்து ஆலை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு ஆலையில் இருந்து வெளியே வந்து, ஆலையின் நுழைவாயில் முன்பு நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் துறை அதிகாரிகளும், நிர்வாகமும் தொழிற்சங்கத்தினரை முன்கூட்டியே அழைத்துப் பேசி நல்லதொரு அணுகுமுறையை கையாள வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி ஆசிரியர்

பொ.இளம்பருதி