
தர்மபுரி அக் 18,
தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்லும் போது பலத்த அதிர்வு ஏற்படுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.
இந்த மேம்பாலம் கடந்த 2010-ம் ஆண்டு (16 ஆண்டுகளுக்கு முன்) கட்டப்பட்டது. மொரப்பூர் ரயில் நிலையம் அருகே இருந்த ரயில்வே கேட் காரணமாக, தருமபுரி – அரூர் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த மேம்பாலம் (Road Over Bridge) கட்டப்பட்டது.

தற்போது இந்த மேம்பாலம் வழியாகத்தான் தருமபுரி, கிருஷ்ணகிரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, இருமத்தூர் மற்றும் சென்னை, பெங்களூரு செல்லும் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயங்கி வருகின்றன.
அளவுக்கு அதிகமான கனரக வாகனங்கள் தினமும் செல்வதால், மேம்பாலத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு சாலை பழுதடைந்துள்ளது. குறிப்பாக ஒரு பகுதியில் பெரிய விரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்லும்போது பலத்த அதிர்வு ஏற்படுகிறது.
*விபத்து ஏற்பட்டால் ஏற்படும் ஆபத்து:*
மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தான் பிரதான மொரப்பூர் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இவ்வழியாக தினமும் 20-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் செல்கின்றன. மேம்பாலம் இடிந்து விழுந்தால், ரயில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும். பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
மொரப்பூர் ரயில் நிலையத்தில் மட்டும் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். தருமபுரி – அரூர் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு, பல மாவட்டங்களுக்கான போக்குவரத்து முடங்கும்.
*மின்சார ஆபத்து – கூடுதல் அதிர்ச்சி தகவல்:*
மேலும், ரயில்வே மேம்பாலம் முழுவதும் ஆங்காங்கே மின் பெட்டிகள் பழுதடைந்து, மின் கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் பாலத்தின் ஓரங்களில் கீழே தொங்கிய நிலையில் உள்ளன. இது விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் திறந்தவெளியில் உள்ள மின் கம்பிகளால் நடைபாதையில் செல்வோருக்கும், மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றால் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் உயிர் ஆபத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
*கோரிக்கைகள்:*
தருமபுரி மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் உடனடியாக மேம்பாலத்தை ஆய்வு செய்து, விரிசல் உள்ள பகுதியை சீரமைக்க வேண்டும். எடை கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும்.
மேம்பாலத்தின் கீழே இயங்கும் ரயில் பாதையின் பாதுகாப்பை கருதி, ரயில்வே நிர்வாகமும் தனி கவனம் செலுத்தி, மேம்பாலத்தின் தாங்கு திறனை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் மின் பெட்டிகளையும், தொங்கும் மின் கம்பிகளையும் உடனே சரி செய்ய வேண்டும்.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட இரு துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி ஆசிரியர்
பொ.இளம்பருதி














Leave a Reply