
*தருமபுரி, அக்.18-*
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு (KRP Dam) நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கே.ஆர்.பி. அணையின் மொத்த உயரம் 52 அடி. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 50.05 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 1,666.29 மில்லியன் கன அடி, தற்போதைய இருப்பு 1,447.05 மில்லியன் கன அடி (87%). அணைக்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில், அதே அளவு நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மத்திய நீர் ஆணையத்தின் (CWC) முன்னறிவிப்பின்படி, வரும் 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும். அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால், வரும் கூடுதல் நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும்.
எனவே, பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, நீச்சலடிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும்போது தாழ்வான தரைப்பாலங்கள், தற்காலிக பாதைகளை நடந்தோ அல்லது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களிலோ கடக்க முயற்சிக்க வேண்டாம்.
கரையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும். ஆற்றுப்படுகை மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள ஆடு, மாடுகள் மற்றும் விவசாய உபகரணங்களை உடனடியாக பாதுகாப்பான மேடான பகுதிகளுக்கு மாற்ற வேண்டும்.
இது தொடர்பாக காவல், தீயணைப்பு, நீர்வளம் மற்றும் வருவாய் துறையினருக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி ஆசிரியர்
பொ.இளம்பருதி














Leave a Reply