Categories

காரிமங்கலம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் சிக்கிய முதியவர் – தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்பு



தர்மபுரி அக் 18,
தர்மபுரி மாவட்டம்,  காரிமங்கலம் அடுத்த திண்டல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் (75). இவர் நேற்று காலை தனது கிணற்றின் அருகே உள்ள மரத்தில் ஆட்டுக்குத் தேவையான தழைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவரது கை நழுவியதில் கத்தி சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

இதையடுத்து, கிணற்றில் இறங்கிக் கத்தியை எடுக்க முயன்ற முருகனால் மீண்டும் மேலே ஏற முடியவில்லை. இதனால், அவர் கிணற்றுக்குள்ளேயே நீண்ட நேரமாகத் தவித்துக் கொண்டிருந்தார்.



அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது, முதியவர் மேலே வர முடியாமல் சிக்கியிருப்பது தெரியவந்தது.

உடனடியாக பாலக்கோடு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, மீன்வலையைப் பயன்படுத்தி முதியவர் முருகனைப் பத்திரமாக மீட்டனர்.

40 அடி ஆழக் கிணற்றில் சிக்கிய முதியவரைத் தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.