
தருமபுரி, அக்.18-
தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஆங்காங்கே மின்சார வயர்கள் தொங்கிக் கொண்டிருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மொரப்பூர் – தருமபுரி சாலையில் அமைந்துள்ள இந்த ரயில்வே மேம்பாலம் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பயன்படுத்தும் முக்கிய பாலமாகும். இந்த மேம்பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளுக்கான மின் பெட்டிகள் (Junction Box) பராமரிப்பின்றி பழுதடைந்து திறந்து கிடக்கின்றன.
இதனால் உள்ளே இருக்கும் மின் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்குகின்றன.
குறிப்பாக தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழைநீர் மின் பெட்டிகளுக்குள் புகுந்தால் மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் நடைபாதையில் செல்வோர், பள்ளி மாணவர்கள் மற்றும் மேம்பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.
மேலும் இரவு நேரங்களில் மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக மேம்பாலத்தை ஆய்வு செய்து, ஆங்காங்கே தொங்கும் மின் வயர்களை சீரமைத்து, மின் பெட்டிகளை மூடி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.















Leave a Reply