
கிருஷ்ணகிரி அக் 19,
ஓசூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே உள்ள அகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடராமன். இவரது மகள் ருக்மிணி (22) தனியார் நிறுவன ஊழியரான இவர், பெங்களூருவை சேர்ந்த உறவினர் அனில்குமார் என்பவரை காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த தம்பதியினர் குடும்பத்துடன் அகொண்டப்பள்ளி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அனில்குமார் தீவிர மதுப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது மதுபோதையில் இருந்த அனில்குமார் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி ருக்மிணியை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த ருக்மிணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த கையோடு கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்ற அனில்குமார், மனைவியை கொலை செய்ததாகக் கூறி சரணடைந்தார். உடனடியாக அவரை கைது செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ருக்மிணியின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் தலைமையில் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிர தடயவியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















Leave a Reply