Categories

தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாயம் – 3 மாவட்ட ஆட்சியர்கள்  எச்சரிக்கை

கேஆர்பி அணை நிரம்பியது – 3 மாவட்ட ஆட்சியர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை



*கிருஷ்ணகிரி, அக்.18-*

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், நேற்று 434 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1,516 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால் 52 அடி கொண்ட கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை கடந்து முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 1,577 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர் கனமழையால் நீர்வரத்து 1,679 கன அடியாக அதிகரித்ததால், தற்போது விநாடிக்கு 2,415 கன அடி உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.



இதனால் கே.ஆர்.பி. அணையில் உள்ள தரைப்பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியது. உபரி நீர் ஆர்ப்பரித்து செல்வதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்கள் கூட்டாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



அதில், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ, தரைப்பாலங்களை கடக்கவோ வேண்டாம். கால்நடைகள் மற்றும் விவசாய உபகரணங்களை பாதுகாப்பான மேடான பகுதிகளுக்கு மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காவல், தீயணைப்பு, நீர்வளம் மற்றும் வருவாய் துறையினர் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.