Categories

“போலி ஜிபே… போலி வக்கீல்” – கோவையில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ஏமாற்றிய பெண்

கோவை நவ 5,

“போலி ஜிபே… போலி வக்கீல்” – கோவையில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ஏமாற்றிய பெண் : மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த ஊழியர்கள்!

₹200-க்கு ஆசைப்பட்டு ₹2,500-க்கு ஸ்கெட்ச் போட்ட போலி வழக்கறிஞர் : வண்டியில் வழக்கறிஞர் ஸ்டிக்கருடன் சுற்றித் திரிந்த கூத்து!

கோவையில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு, கூகுள் பே (GPay) முறையில் பணம் அனுப்பிவிட்டதாகக் கூறி ஏமாற்றித் தப்ப முயன்ற போலி பெண் வழக்கறிஞரை ஊழியர்கள் சாதுரியமாகப் பிடித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நேற்று ₹200… இன்று ₹2,500!

கோவை, சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த வாசகி என்ற பெண், பவர்ஹவுஸ் பகுதியில் இயங்கி வரும் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு நேற்று மாலை சென்று உள்ளார். அங்கு ரூ. 200 மதிப்பிலான மளிகைப் பொருட்களை வாங்கிய அவர், பணத்தை ஆன்லைன் மூலம் ‘ஜிபே’ செய்து விட்டதாகப் பொய் கூறி விட்டு அங்கு இருந்து நைஸாக நழுவி உள்ளார்.

இந்நிலையில், இன்று இரவு சுமார் 7 மணி அளவில் அதே பெண் மீண்டும் அதே கடைக் சென்று உள்ளார். இந்த முறை தாராளமாகச் சுமார் ரூ. 2,500 மதிப்பிலான பொருட்களை அள்ளிக் கொண்டு, வழக்கம் போல் “ஜிபே பண்ணிட்டேன்” என்று கூறி விட்டு அங்கு இருந்து புறப்பட முயன்று உள்ளார்.

கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ஊழியர்கள் ஜிபே கணக்கைச் சரி பார்த்த போது, பணம் வந்து சேராததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள், அந்தப் பெண் நடந்து சென்ற பாதையில் வேகமாகப் பின்தொடர்ந்து ஓடினர்.
அருகில் உள்ள பழமுதிர் நிலையம் அருகே வைத்து அந்தப் பெண்ணை ஊழியர்கள் சுற்றி வளைத்துச் மடக்கிப் பிடித்தனர்.

இதுகுறித்து உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரத்தினபுரி காவல்துறையினர், அந்தப் பெண்ணைப் பிடித்துக் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, தான் ஆந்திராவில் உள்ள ‘குளோபல் சட்டக் கல்லூரியில்’ (Global Law College) பயிலும் வழக்கறிஞர் எனக் கூறி அந்தப் பெண் கெத்து காட்ட முயன்று உள்ளார். மேலும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் முன்பகுதியிலும் பெரிய எழுத்துக்களில் ‘ADVOCATE’ (வழக்கறிஞர்) என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
ஆனால், காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் சட்டப்படிப்பு எதுவுமே படிக்கவில்லை என்றும், வழக்கறிஞர் என்று பொய்ய சொல்லி ஊரை ஏமாற்றி வந்ததும் அம்பலமானது.

நேற்று ரூ. 200-க்கு ஏமாற்றியவர், இன்று தைரியமாக ரூ. 2,500-க்கு ஆப்பு வைக்க முயன்ற போது கையும் களவுமாக, மாட்டி உள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் அந்தப் பெண் வேறு எங்காவது இதுபோன்று ‘ஜிபே’ மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா ? என்ற கோணத்தில் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.