கோவை அக் 4,
கோவை மாவட்ட குலாலர் சங்கத்தின் 53-ஆம் ஆண்டு விழா, கல்விப் பரிசளிப்பு விழா மற்றும் சங்க பயன்பாட்டிற்கான புதிய கணினி வழங்கும் முப்பெரும் விழா, இன்று துடியலூரில் உள்ள எஸ்.எஸ். கமலேஷ் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கோவை மாவட்ட குலாலர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பி. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட செயலாளர் ஜி.சி. பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் கே. நடராஜ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
விழாவில் பேராசிரியை டாக்டர் ஆர். பரிமளா, சினேக ராம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஜி. விஸ்வநாதன், திரைப்பட நடிகரும் இயக்குநருமான பேராசிரியர் அருள்நிதி மு. துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கல்விப் பரிசு பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.

மேலும், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். மண்பாண்டத் தொழில் செய்து வரும் இரு கலைஞர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் திருவி வழங்கப்பட்டது.

விழாவில், குலாலர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழக அரசின் பல்வேறு ஆணையங்கள் மற்றும் வாரியங்களில் தகுதியான குலாலர் சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வட்டியில்லா கடன், ஏற்றுமதி சலுகை, தொழில் நடைபெறும் இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்குதல் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகளை கணினி மயமாக்குதல் உள்ளிட்ட திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜி. பன்னீர்செல்வம் பி.இ. நன்றி உரையாற்ற, 53-ஆம் ஆண்டு முப்பெரும் விழா சிறப்பாக நிறைவடைந்தது.














Leave a Reply