Categories

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27 ம் தேதிக்கு தள்ளி வைப்பு

கோவை நவ 16,

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – வரும் நவம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனக் கோவை போக்சோ நீதிமன்றம் அறிவிப்பு!

21 நாட்களில் 819 பக்க குற்றப்பத்திரிகை & 68 சாட்சிகள் விசாரணை: நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் வழக்கு ஒத்திவைப்பு!

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்று வழங்கப்பட இருந்த தீர்ப்பை வரும் நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த மே மாதம் 21-ஆம் தேதி கோவை சூலூர் அடுத்து உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்த 10 வயது சிறுமி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்புப் பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேதப் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
காவல் துறையினர் கைது செய்ய முயன்ற போது, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்துத் தப்பிக்க முயன்ற கார்த்திக்கிற்கு வலது கை மற்றும் வலது கால் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது.

சிறுமிக்குக் கடையில் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

அன்றைய தினம் தமிழக காவல்துறை டி.ஜி.பி யாகப் பதவி வகித்த சந்தீப் ராய் ரத்தோர் நேரில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தி விசாரணையைத் துரிதப்படுத்தினார்.

வழக்கின் தீவிரம் கருதி காவல்துறையினர் மிக விரைவாகச் செயல்பட்டு, சம்பவம் நடந்த 21 நாட்களில் 819 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை (Charge Sheet) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளும் முக்கிய ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

கோவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில்,
68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
221 முக்கிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இருதரப்பு வாதங்களும் நிறைவு அடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (நவம்பர் 16) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கின் தீர்ப்பை வரும் நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஹரிஹரன் உத்தரவிட்டார்.