
அரூர், ஜனவரி 28:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி அரூரில் நடந்த நிகழ்ச்சிகளுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து,
தமிழக அரசியல் களத்தில் நடந்து வரும் கூட்டணி மாற்றங்கள் குறித்து விமர்சமாக பேசினார்.
தேர்தல் சூழ்நிலையில் பாஜகவின் உத்திகள், அதிமுகவின் பலவீனம், திமுக கூட்டணியின் வலிமை ஆகியவற்றை அவர் வெளிப்படுத்தினார்.
தேர்தல் சூழலில் கூட்டணி மாற்றங்கள்: பாஜகவின் ‘டிடிவி-ஓபிஎஸ்’ திட்டம்
தமிழக அரசியல் களம் தேர்தலை நோக்கி சூடு பிடித்துள்ளதாக பாலாஜி கூறினார்.
“டிடிவி தினகரன் ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் இணைந்துவிட்டார். ஓபிஎஸ் (ஒ.பன்னீர்செல்வம்) இன்றோ நாளைக்கோ இணைய வாய்ப்புள்ளது. அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இல்லை என அரசியல் அனுபவம் உள்ளவர்களுக்கு தெரியும்,” என அவர் சாடினார்.
பாஜக, அதிமுகவை மெல்ல மெல்ல பலவீனப்படுத்தி, ‘தரகர் வேலையைப் பார்த்து’ எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை சேர்க்கிறது என விமர்சித்தார்.
“தேமுதிகவும் தவெகவில் இணையாது. மக்களைத் திசைதிருப்பவே பாஜக-அதிமுகவுடன் இருக்கிறது. அதிமுகவைத் தேர்தலில் ஒழிக்கவே இது செயல் திட்டம்,” என்றார்.
அதிமுகவின் நிலை கவலையளிக்கிறது: எடப்பாடி ‘கொடி அசைப்பு’ உத்தி
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கவலையளிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளதாக பாலாஜி குற்றம் சாட்டினார்.
“அவர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். ஆனால், கூட்டத்தில் யாரோ கொடி அசைத்ததை வைத்து அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது என பேசுகிறார். உண்மையான கூட்டணி தலைவர்கள் இடையே நடக்கும். இது அதிமுக பலவீனத்தை வெளிப்படுத்துகிறது,” என சாடினார்.
விசிக தலைவர் திருமாவளவன் முன்பு வலியுறுத்தியபடி, தமிழ்நாட்டில் திராவிட அரசியலைப் பேசும் கட்சிகள் இருக்க வேண்டும்; அதிமுக தேய்ந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தியது போல் இருந்த நிலைமை மாறிவிட்டதாக அவர் வருத்தப்படைத்தார்.
விஜயின் தவெக அறிவிப்புகள் ‘குழந்தைத்தனம்’: யாரும் இணையவில்லை
தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநாட்டில் விஜய், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தது குழந்தைத்தனமானது என விசிக தலைவர் கூறியதை விஜய் நிரூபித்துள்ளதாக பாலாஜி விமர்சித்தார்.
“செங்கோட்டையன் தவெகவில் இணைந்து, பல நிர்வாகிகள் வருவார்கள் என சொன்னாலும், யாரும் வரவில்லை,” என்றார்.
அர்ஜுனா பேச்சு:
சமூக வலைதள ‘வித்தைக்காரன்’ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சமூக வலைதளங்களில் இன்னும் இருப்பதாகவும், சாலையில் வித்தை காட்டும் வித்தைக்காரன்போல் பேசுவதாகவும் பாலாஜி குறிப்பிட்டு விவாதத்தை மீண்டும் தூண்டினார்.
அரூர் தொகுதியில் விசிக போட்டி உறுதி
அரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகள் உள்ளதால் விசிக தொடர்ந்து போட்டியிடுகிறது. “எதிர்வரும் தேர்தலிலும் அரூரை கோரி போட்டியிடுவோம்.
கட்சித் தலைவர் திருமாவளவன் வாய்ப்பு ஏற்படுத்துவார்.
அரூர், விசிகவினர் விரும்பும் தொகுதி,” என பாலாஜி தெரிவித்தார்.
திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி:
மக்கள் ஆதரவு உறுதி
மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியில் (திமுக தலைமை) விசிக அங்கம் வகிப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என பாலாஜி உறுதியாகத் தெரிவித்தார்.
“மக்களுக்கு தேவையான திட்டங்கள், கூட்டணி வலிமை காரணமாக திமுக மீண்டும் ஆட்சி பிடிக்கும். எந்த ஐயமும் இல்லை,” என்றார்.
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பானது:
அரசுத் திட்டங்கள் பாராட்டு
தமிழ்நாட்டில் தோழி விடுதி, பெண்களுக்கான திட்டங்கள் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாலாஜி பாராட்டினார். “அரசுப் பணியில் பெண்கள் 40%க்கும் மேல் உயர்ந்துள்ளனர். ஒன்றிய அரசு அறிக்கைகள் தமிழ்நாட்டை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாகத் தெரிவிக்கின்றன. துணை முதலமைச்சர் ‘தமிழ்நாடு மகளிர் நாடு’ என சொல்வது பொருத்தம்,” எனவும் கூறினார்.













Leave a Reply