
கோவை மார் 19, கோவை – கேரளா எல்லைப்பகுதியில் உள்ள வாளையார் அணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட தீவிர தேடுதலுக்குப் பிறகு இன்று அவரது உடல் மீட்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஜெரின் சஞ்சய் (21), கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் தனது நண்பர்கள் இருவருடன் வாளையார் அணைப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அப்போது அவர்கள் அணையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, ஜெரின் சஞ்சய் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டார். உடன் இருந்த நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த கேரள மாநில கஞ்சிகோடு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று முழுவதும் தேடியும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இன்று காலை ஜெரின் சஞ்சய்யின் உடல் நீர்மட்டத்தின் மேல் மிதந்த நிலையில் காணப்பட்டது. தகவல் அறிந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.














Leave a Reply