Categories

தீர்த்தமலை அருகே இந்திர தீர்த்தகரீஸ்வரர் கோயிலில் சேவை அறக்கட்டளை தொடக்க விழா


_தருமபுரி, மே 2:_ 
தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை அருகே மொணடுகுழி கிராமத்தில் அமைந்துள்ள வடிவாம்பிகை உடனுறை இந்திர தீர்த்தகரீஸ்வரர் திருக்கோயிலில், “தீர்த்தமலைக் காத்த முருகன் சேவை அறக்கட்டளை” தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

விழா இறைவணக்கம், திருமுறை பாராயணம் மற்றும் மங்கல விளக்கேற்றத்துடன் தொடங்கியது. அறக்கட்டளையின் நிறுவனர் பேராசிரியர் எம்.ஆர். முருகன் வரவேற்புரை ஆற்றினார்.

தருமபுரி மாவட்ட மூத்த எழுத்தாளர் பொன்னுரங்கன் முன்னிலை வகித்து உரையாற்றினார். மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ரகுராமன் வாழ்த்துரை வழங்கினார்.

ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் கி. திருச்செல்வன் கோயிலின் தொன்மையான வரலாற்றை விளக்கினார். தமிழியல் ஆய்வாளர் கி. பிருதிவிராஜ், கோயிலின் இலக்கிய சிறப்புகளையும் வரலாற்றுப் பெருமைகளையும் விரிவாக எடுத்துரைத்தார். செங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் குப்பன் வாழ்த்தி பேசினார்.

டிஎன்சி குடும்பத்தைச் சேர்ந்த புஷ்பா அம்மையார் தலைமையுரை ஆற்றினார். நிகழ்வை ஒருங்கிணைத்த நுண் சிற்பக் கலைஞர் செ.கவியரசன், அறக்கட்டளையின் நோக்கம் குறித்து விளக்கினார். செங்கம் தாலுகா தாசில்தார் முனுசாமி நன்றியுரை வழங்கினார்.

தீர்த்தமலைக் காத்த முருகன் கோயிலின் வளர்ச்சி, ஆன்மிகப் பணிகள், சமூக சேவை நடவடிக்கைகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதே இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.

விழாவில் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர்கள், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த திரளான சான்றோர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா மிகச் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெற்றது.