
_கோவை, மே 21:_ அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத் (ஏபிஜிபி) அமைப்பின் சார்பில், பொருள்களின் அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி.) முறையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவின் நகல்கள் பிரதமர், மத்திய நிதி அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், நுகர்வோர் விவகார அமைச்சகம் ஆகியவற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும்போது பல மடங்கு அதிகமாக எம்.ஆர்.பி. அச்சிடப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், அன்றாட நுகர்வுப் பொருள்கள் மற்றும் பிராண்டு பொருள்களில் போலியான தள்ளுபடி சலுகைகள் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, எம்.ஆர்.பி.க்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும், உற்பத்திச் செலவு மற்றும் முதல் விற்பனை விலையைக் கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டும், போலியான தள்ளுபடிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், எம்.ஆர்.பி. முறையைக் கண்காணிக்க தனி சுயாட்சி ஆணையம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிறைமதியிடம், ஏபிஜிபி மாநில துணைச் செயலாளர் சபரீஸ்வரன், மாநில பொருளாளர் சுவாமிநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மேட்டுப்பாளையம் அமைப்பாளர் துஷ்யந்த் கோவிந்தசாமி ஆகியோர் வழங்கினர்.














Leave a Reply