Categories

பாதை ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்


தருமபுரி மே 21,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கலாப்பறை கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், 44, மூளை பாதிப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.

இன்று அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல வழிப்பாதை இல்லாததால், காலை முதல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பொதுப் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் உடலை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.



தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் பாதை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், ஒரு சிலர் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால், நல்லடக்கம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதைக் கண்டித்தும், ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றக்கோரியும் வெங்கட்ராமன் குடும்பத்தினருக்கு ஆதரவாக கலாப்பறை கிராம மக்கள், அரூர் – சித்தேரி சாலையில் சுமார் 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, “ஆக்கிரமிப்பை முதலில் அகற்றிக் கொடுங்கள், பிறகு நாங்கள் உடலை நல்லடக்கம் செய்கிறோம். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் மறியலை கைவிடுகிறோம்” என கிராம மக்கள் தெரிவித்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.