
*கோவை, அக்.9-*
கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் கற்பகம் கல்லூரி எதிரே அரசு புறம்போக்கு நிலத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பியும், அதிகாரிகளின் ஆதரவால் நோட்டீஸ் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க.வினர் என்றும், தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வினர் என்றும் தங்களை காட்டிக் கொண்டு சிலர், அரசு புறம்போக்கில் பேக்கரி, ஓட்டல், பழக்கடை என பிரமாண்டமாக கடைகளை நடத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகின்றனர்.

அரசுக்கு ஒரு பைசா கூட வாடகையோ, வரியோ செலுத்தாமல், அதிகாரிகளுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் மாமூல் கொடுத்து கடை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் கிடைத்த வருவாயில் பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள இடங்களை வாங்கி சொந்த கட்டிடங்களையும் கட்டியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 12 ஆண்டுகளுக்கு பிறகு கண்திறந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஆனால் அனுப்பிய நோட்டீசிலும் கூட முக்கிய ஆக்கிரமிப்பாளரான எம்.டி.எஸ். பேக்கரியை எம்.டி.எஸ். என்பதற்கு பதிலாக எம்.டி.எஸ். என தவறாக குறிப்பிட்டுள்ளது அதிகாரிகளின் விசுவாசத்தை காட்டுவதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
*அரசுக்கு பல கோடி இழப்பு:*
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வரும் இவர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகை, ஜி.எஸ்.டி., வரி எதையும் செலுத்தாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
அதிகாரிகள் இவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கடந்த 5 மாதங்களாகியும் நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகள் மீதும், ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














Leave a Reply