Categories

ஒகேனக்கலில் மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள் கூட்டம்



*தருமபுரி, அக்.10-*

புரட்டாசி மகாளய அமாவாசையை ஒட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து காவிரி ஆற்றில் முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் வாழ்வு செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.



இதனால் அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஒகேனக்கல்லுக்கு வருவது வழக்கம்.

அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றின் முதலைப்பண்ணை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்.

இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒகேனக்கலில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்ததால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது.

தற்போது காவிரி ஆற்றில் 3 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருப்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.