
ஓசூர், நவ. 9 –
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ராயக்கோட்டை அடுத்த வன்னியபுரம் பகுதியில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் உள்ள மேரி கோல்ட் பிளான்ட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், நால்கோ கம்பெனியின் ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வந்தவர்கள்:

1. சாரதிக்குமார் (25) – பெல்ராம்பட்டி கிராமம், பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம்
2. அக்மல்பாபு பாய் (28) – தின்னூர் பகுதி, பஞ்சப்பள்ளி, பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம்
3. காவிரி (31) – ஜம்பூத் கிராமம், அனுமந்தபுரம், தர்மபுரி மாவட்டம்

இவர்கள் மூவரும் அங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில், மூவரும் தொட்டிக்குள் விழுந்து கழிவுநீரில் மூழ்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகத்தினர், சக ஊழியர்களின் உதவியோடு மூவரையும் மீட்டு ஆபத்தான நிலையில் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஓசூர் டி.எஸ்.பி. சுதீர், இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் தாசில்தார் ஜெகதீஷ் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி, மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் விபத்து நடந்த டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்கு நேரில் சென்று, தொழிலாளர்கள் உயிரிழந்த கழிவுநீர் தொட்டி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து ராயக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மூன்று தொழிலாளர்களும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.














Leave a Reply