
அரூர், நவ.1-
டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அரசு மதுக்கடைகள் பல மூடப்பட்டுள்ளன.

அரூர் கொளகம்பட்டி சாலையில் உள்ள அரசு மதுபான கடை மூடப்பட்டதால் காலையில் அந்த சாலை வெறிச்சோடி கிடந்தது. வழக்கமாக மதுப்பிரியர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அப்பகுதியில் இன்று இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணம் செய்தனர்.

அதே வேளையில், அரூரில் இயங்கும் தனியார் மதுக்கூடங்களில் கூட்டம் அலைமோதியது. தனியார் பார்களில் இன்று முதல் மது பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும் என அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் மதுப்பிரியர்கள் முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.
ஏராளமான மதுப்பிரியர்கள் இருசக்கர வாகனங்களில் தனியார் பார்களுக்கு வந்ததால், அப்பகுதியில் பொதுமக்கள் பயணம் செய்வதில் இடையூறு ஏற்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்படாமல், போதிய இடவசதி இன்றி பாட்டில்களை பாதுகாப்பது சாத்தியமில்லை எனவும், கூடுதல் பணிச்சுமை மற்றும் சம்பள பிடித்த அபாயம் உள்ளதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட மேலாளரிடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்டபோது, அவர் தொடர்பை எடுக்காமல் துண்டித்துவிட்டார். எத்தனை கடைகள் இயங்குகிறது, எதற்காக கடைகள் அடைக்கப்பட்டது என்பது குறித்து பலமுறை முயற்சித்தும் அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














Leave a Reply