Categories

அரூரில் விபத்து மையங்களாக மாறும் 6 சந்திப்புகள் – உடனே சிக்னல் அமைக்குமா காவல்துறை?

அரூர், நவ. 9-

தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையான கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி இல்லாததால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன.

விபத்து அதிகம் நடக்கும் 6 சந்திப்புகள்:

அரூர் அரசு மருத்துவமனை சந்திப்பு –

தர்மபுரியில் இருந்து அரூர் நோக்கி வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் முதலில் சந்திக்கும் பகுதி. ஆம்புலன்ஸ் கூட இங்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாகிறது.

அரூர் போக்குவரத்து பணிமனை மற்றும் தூய இருதய ஆண்டவர் ஆலயம், கால்நடை மருத்துவமனை பகுதி – பேருந்துகள், பணிமனை வாகனங்கள் வந்து செல்லும் பகுதி.

ராஜீவ் காந்தி சிலை அருகே சாலை சந்திப்பு – இதற்கு அடுத்து 100 மீட்டர் தொலைவில் சேலம் – அரூர் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வரும் வாகனங்கள் கச்சேரிமேடு பகுதியில் சந்திக்கின்றன.

கச்சேரிமேடு சந்திப்பு – கச்சேரிமேட்டில் இருந்து சேலம் நோக்கி செல்லும் வாகனங்கள் சந்திக்கும் இடம்.

பெத்தூர் பிரிவு சாலை சந்திப்பு – கச்சேரிமேட்டில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள் இங்கு திரும்புகின்றன.

நான்கு ரோடு மற்றும் மூன்று ரோடு சந்திப்புகள் – சேலத்தில் இருந்து அரூர் – சென்னை நோக்கி வரும் வாகனங்கள் நான்கு ரோடு சந்திப்பிலும், திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் மூன்று ரோடு சந்திப்பிலும் சந்திக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலையில் அளவுக்கு அதிகமான போக்குவரத்து இருப்பதால், அனைத்து பகுதிகளிலும் உடனடியாக சிக்னல்கள் அமைத்து, வாகனங்களை கட்டுப்படுத்தி, விபத்துகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெயரளவில் மட்டும் சிக்னல்:

அரூரில் சட்டம் – ஒழுங்கு காவல் பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு என இரண்டு பிரிவுகள் இருந்தும், சிக்னல்கள் அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் முறையாக செயல்படுவதில்லை. தனியார் விளம்பர பதாகைகளை மட்டுமே வைத்து ‘இங்கு ஒரு சிக்னல் இருக்கிறது’ என்று தெரியும் வகையில் பெயரளவில் மட்டுமே சிக்னல்கள் உள்ளன.

போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், செய்தியாளர்கள் என பலர் அரூர் நகராட்சி நிர்வாகத்திற்கும், அரூர் உட்கோட்ட காவல்துறைக்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

மாதக்கடைசியில் மட்டும் சோதனை:

காவல்துறையினர் சண்டை, சச்சரவு, நிலத்தகராறு, பாதுகாப்பு பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், போக்குவரத்து விதிமீறல்களில் கவனம் செலுத்துவதில்லை எனவும் குற்றச்சாட்டு உள்ளது. மாதக்கடைசியில் வழக்கிற்காக மட்டுமே வாகனங்களை சோதனை செய்து அபராதம் விதிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அபராதத்திற்காக அல்ல, மக்கள் நலன் கருதி விபத்தில்லா நகராட்சியாக உருவாக்க கூடுதல் காவல்துறையினரை நியமிக்க வேண்டும். வெளிப்பணிக்கு சென்ற காவலர்களை மீண்டும் அரூருக்கு அழைக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தமிழக காவல்துறை தலைவர், மேற்கு மண்டல காவல்துறை தலைவர், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோர் அரூர் உட்கோட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து விபத்தில்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நடவடிக்கை எடுக்குமா காவல்துறை? பொறுத்திருந்து பார்ப்போம்.