
*அரூர், நவ. 9 -*
தர்மபுரி மாவட்டம் அரூரில் சாலை விபத்துகளில் பள்ளி மாணவன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
*எஸ்.எஸ்.ஐ. மகன் உயிரிழப்பு:*
தர்மபுரி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் கமலநாதன். இவர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவரது வீடு அரூர் திருவள்ளுவர் நகரில் உள்ளது. இவரது மகன் ராகவன் (18). இவர் அரூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
ராகவன், தனது அக்காவான மருத்துவ மாணவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சொந்த வேலை காரணமாக அரூர் பேருந்து நிலையத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வர்ணதீர்த்தம் தூய்மை பணியாளர்கள் குடியிருப்புக்கு எதிரே எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் மீட்டு இருவரையும் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் ராகவன் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர். அவரது அக்கா ஐஸ்வர்யாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*லாரி மோதி கணவர் உயிரிழப்பு:*
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கடப்பநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (37). இவரது மனைவி விஜயலட்சுமி (23). இத்தம்பதியர் திருப்பூரில் வேலை செய்து வந்தனர்.
தீபாவளி பண்டிகைக்காக திருப்பூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்றனர். அப்போது அரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி விஜயலட்சுமி அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அரூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இரு சம்பவங்களில் பள்ளி மாணவன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.














Leave a Reply