
தேன்கனிக்கோட்டை, நவ. 9 –
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து பெட்டமுகிலாளம் மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ளது அய்யூர் வனப்பகுதி. மூங்கில் காடுகளை கொண்ட இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், புள்ளி மான்கள், மலைப்பாம்புகள், பறவை இனங்கள் என வனம் சார்ந்த உயிரினங்கள் அதிக அளவில் வாழ்கின்றன.

இந்த வனப்பகுதியில் சாலை ஓரத்தில் சாமி ஏரி என்ற பழமையான ஏரி உள்ளது. இந்த ஏரியில் காட்டு யானைகள் உள்ளிட்ட அனைத்து வன விலங்குகளும் அவ்வப்போது சென்று தண்ணீர் குடித்தும், ஆனந்தமாக குளித்தும் செல்வது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் சாமி ஏரியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு யானைகள் கூட்டம் வந்து தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து சென்றுள்ளது. காட்டு யானைகள் மறுபுறத்தில் தண்ணீர் குடிப்பதை சாலை வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தங்களது செல்போன்கள் மூலம் வீடியோ எடுத்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் நீண்ட நேரம் அப்பகுதியில் நின்று தண்ணீர் குடித்த காட்டு யானைகளை ரசித்து சென்றுள்ளனர். தற்போது ஏரியில் அதிக அளவில் தண்ணீர் இருப்பதால் அங்கு வாழும் வனவிலங்குகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.














Leave a Reply