Categories

இலவச வீட்டு மனை நிலம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா!
கிராமப் பெண்கள் போராட்டம் – வட்டாட்சியர் உறுதியால் கலைந்து சென்றனர்

தர்மபுரி நவ 19,

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பையர்நாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்கட்ராமபுரம் கிராமத்தில், கல் உடைக்கும் தொழில் மற்றும் கூலி வேலை செய்து வரும் 110 குடும்பத்தினர் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.


இவர்களில் 52 நபர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 52 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவில் சுமார் 200 குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாக  வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் கல் உடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களில் உள்ள ஆண்கள், பெண்கள் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் வசித்து வருவதால், அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.



கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை நிலம் கேட்டு தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என பலரிடமும் மனு அளித்து போராடி வந்த நிலையில், இன்றும் வீட்டு மனை நிலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து, வீட்டு மனை பட்டா கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து உடனே விரைந்து வந்த அரூர் வட்டாட்சியர் மனோகரன், கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும், நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டு தகுதி உடைய நபர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்றும், மற்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.