Categories

அ.தி.மு.க. 55-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.


தர்மபுரி நவ 18,
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வே.சம்பத்குமார், அ.தி.மு.க. தலைமைக் கழக இளம் பேச்சாளர் சிவராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

சட்டமும் சீரழிந்துவிட்டது; காவல்துறை, அரசு அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டுள்ளன – சம்பத்குமார் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு



*அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வே.சம்பத்குமார் பேசியதாவது:*

இன்று சட்டமும் சீரழிந்து கொண்டிருக்கிறது. காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. எந்தத் திட்டங்களும் நிறைவேறாத நிலை உள்ளது.

சட்டப்பேரவையும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது, சட்டம் ஒழுங்கும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. முன் அனுபவம் இருந்தால்தானே, என்ன நடந்தது, என்ன பிரச்னை வந்தது என்று தெரியும்.


மாற்றம் வேண்டும் என்று கூறி ஆட்சியை மாற்றினார்கள். ஆனால், அந்த மாற்றத்தின் விளைவால் இன்று மக்கள் சிக்கிக் கொண்டார்கள்.

இன்று ரேஷன் அரிசி, நெல், அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது. பேருந்து உரிமையாளர்கள் எல்லாம் சாலையில் நிற்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் என எந்தக் கட்சியும் மேடை போட்டுப் பேசக்கூடாது என்ற நிலை இருந்தது. அவர்களே வெற்றி பெற்ற பிறகு அவர்களே சென்றுவிடுவார்கள் என்று நினைத்தோம்.

ஒரே ஒரு எம்.எல்.ஏ. கூட சுத்தமாக இருக்க வேண்டும் என்று நான் வாக்கு கேட்டுப் பேசினேன். ஆனால், சட்டப்பேரவைக்குச் சென்று பார்த்தால், ஒரு எம்.எல்.ஏ. கூட அப்படி இல்லை.


நம் அமைச்சர்கள் எல்லாம் வந்த உடனே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டத்தில் பணிகளை விரைவாகச் செய்வார்கள். ஆனால், இன்று கேட்பதற்கு யாரும் இல்லை.

என்னை நம்பி வாக்களித்த மக்கள், கட்சியை நம்பி வாக்களித்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே வருமானம் இல்லாமல் கூட எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.

இன்று விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இன்று ஆட்சி நடத்துபவர்களை நேரடியாகப் பார்த்தேன்.

எனவே, மக்களின் குறைகளைத் தீர்க்க, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


எம்.ஜி.ஆர். வகுத்த கொள்கையால்தான் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கிறது – இளம் பேச்சாளர் சிவராமன் சிறப்புரை

*அ.தி.மு.க. தலைமைக் கழக இளம் பேச்சாளர் சிவராமன் பேசியதாவது:*

அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம் நமது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்துத் தந்த கொள்கைதான். அவர் கொண்டு வந்த திட்டங்களும், இந்த இயக்கத்தின் நோக்கமும் இன்று வரை மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது.

இன்று நாம் எதிர்பார்க்கின்ற இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் ஒரே நாளில் வந்தது கிடையாது. இது தமிழ்நாட்டில் மட்டும்தான் சாத்தியமானது.

இன்று பாராளுமன்றத்திலும் சரி, எங்கும் சரி, மக்கள் அனைவரும் சமத்துவத்தோடு வாழ்கிறார்கள் என்றால், அதற்கு இந்த தமிழ்நாட்டை அதிகம் ஆட்சி செய்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் காரணம்.

உங்களுடைய பழைய பத்திரங்களை எடுத்துப் பாருங்கள். நம்முடைய தாத்தா காலத்தில் எல்லோரும் வெறும் கைநாட்டுதான் வைத்திருப்பார்கள். ஆனால் இன்று நம் சமுதாயத்தில் அத்தனை பேரும் கையெழுத்து போடுகிறார்கள் என்றால், அதற்கு ஒரே காரணம் அ.தி.மு.க. கொண்டு வந்த கல்வித் திட்டங்கள்தான்.

இன்று எல்லோரும் தோளில் துண்டு போடுகிறோம். இடுப்பில் கட்டிய துண்டை இன்று தோளில் போடுகிறோம் என்றால், அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த சாதனை என்று சொல்லலாம்.

குடிநீருக்கும், விவசாயத்திற்கும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம், விவசாயிகளுக்கு இலவச ஆடு, மாடு, கோழிகள், தமிழுக்கு என்று சொன்னால் தமிழ்ப் பல்கலைக்கழகம் கொண்டு வந்தது நம்முடைய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான்.

என்னுடைய சகோதரி மருத்துவம் படிக்கிறார். ஒவ்வொரு வருடமும் கட்டணம் கட்டும்போது எவ்வளவு சிரமம் என்று எனக்குத் தெரியும். நம்மைப் போன்ற ஏழை, எளிய, கிராமப்புற மக்கள் யார் வேண்டுமானாலும் போய் படிக்கலாம், அதற்கு நான் கட்டணம் கட்டுகிறேன் என்று சொன்ன இயக்கம் என்றால் அது அ.தி.மு.க.தான்.

விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு, பசி இருக்கும் வரை அம்மா உணவகம் என்று நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இன்று ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன செய்தார்கள்? 5 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி செய்வோம் என்றார்கள், செய்தார்களா? மாதம் 1000 ரூபாய் என்றார்கள், கொடுக்கிறார்களா? வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை என்றார்கள், கொடுத்தார்களா? இதையெல்லாம் ஏன் செய்யவில்லை?

அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கிய கடனை காரணம் காட்டுகிறார்கள். மக்களுக்கு செய்வதற்கு திட்டத்திற்கு காசு கிடையாது என்கிறார்கள். ஆனால் சொன்ன வாக்குறுதியை செய்வதற்குத்தான் மனம் கிடையாது.

எம்.ஜி.ஆர். எப்போதாவது மக்களுக்கு தவறான கருத்தை சொன்னாரா? கிடையாது. ஒழுக்கம் என்று சொன்னால், ஒரு நிர்வாகி தவறு செய்தால் அந்தக் கணமே அம்மா அவர்கள் நீக்கிவிடுவார்.

இன்று தருமபுரியில் படிக்கின்ற மாணவர்களுக்கு அரசு கலைக் கல்லூரி யார் கொண்டு வந்தது? அரசு மருத்துவக் கல்லூரி தருமபுரியிலும், கிருஷ்ணகிரியிலும் யார் கொண்டு வந்தது? என்னால் காலரை நிமிர்த்தி சொல்ல முடியும், அண்ணா தி.மு.க. கொண்டு வந்தது என்று.

நம் இயக்கம் சந்திக்காத வீழ்ச்சியும் கிடையாது, கொண்டாடாத வெற்றியும் கிடையாது. நாம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்துவிட்டோம்.

ஒரே ஒரு குறை என்னவென்றால், நாம் செய்த திட்டங்களை, மக்களுக்கு செய்கின்ற நலத்திட்டங்களை மக்களிடம் சொல்லிக் காட்ட வேண்டும். உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம், உங்கள் தெருவில் இருப்பவர்களிடம் சொல்லுங்கள், இந்தத் திட்டம் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்று. அதில் தவறே கிடையாது.

அ.தி.மு.க. என்பது நமக்குள் ஆயிரம் விஷயம் இருக்கலாம். நமக்குள் சண்டை வரலாம். ஆனால் cc அ.தி.மு.க. ஒரு குடும்பம் மாதிரி. மற்றவர்கள் எல்லாம் கட்சியை கார்ப்பரேட் கம்பெனி மாதிரி நடத்துகிறார்கள். அ.தி.மு.க. ஒரு குடும்பம்.

ஒவ்வொரு கோயில்களிலும், ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் அம்மாவுடைய படம் போட்டு தாய்மார்கள் பாலூட்டும் அறை என்று இருக்கும். அதைப் பார்க்கும்போது எனக்கு உள்ளுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

இன்று அம்மா அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு குழந்தை கிடையாது. அவர்கள் பிள்ளையாக நினைத்தது, வாரிசாக நினைத்தது அத்தனையும் நாம்தான். இந்தக் கழகம் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்.

எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடி அவர்களுடன் இணைந்து, இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல்களிலும், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் மிகவும் வலிமையாக இருந்து நம்முடைய பலத்தை காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.