Categories

234 தொகுதிகளிலும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் “பீட் புக்” கட்டாயம்! – தமிழக முதல்வருக்கு கோரிக்கை

தமிழகம் முழுவதும் கிராமப்புற பாதுகாப்புக்கு ஒரே தீர்வு – e-Beat Book

சென்னை நவ 15,

கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, சந்து கடை தொல்லை, போதை பொருள் விற்பனை, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த, காவல்துறையின் *”பீட் புக் / பாட்டா புக்” நடைமுறையை தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும்* கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு உள்ளாட்சி அரசு செய்தியாளர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கிராம மக்களின் குரலாக, கள நிலவரத்தை நேரில் கண்டு இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

தமிழக காவல்துறை – அமைப்பு எப்படி?

தமிழக காவல்துறை நிர்வாக வசதிக்காக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் ஐ.ஜி. தலைமையில் செயல்படுகிறது.

– வடக்கு மண்டலம்: காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு
– மத்திய மண்டலம்:தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை
– மேற்கு மண்டலம்: கோவை ஊரகம், திருப்பூர் ஊரகம், சேலம் ஊரகம், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்
– தெற்கு மண்டலம்:மதுரை ஊரகம், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி

இதுதவிர, சென்னை மாநகர காவல்துறையில் மட்டும் தனியாக வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய என 4 மண்டலங்கள் உள்ளன. அதில் சுமார் 140 காவல் நிலையங்கள் உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 38 காவல் மாவட்டங்கள், 11 சரகங்கள், 277 உட்கோட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் 2,050 காவல் நிலையங்கள் உள்ளது. இதில் 1,382 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், 245 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 256 போக்குவரத்து காவல் நிலையங்கள், 54 சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் அடங்கும்.

இந்த 2,050 காவல் நிலையங்களிலும், 234 தொகுதிகளிலும் எந்த விதி விலக்கும் இன்றி பீட் புக் நடைமுறை கட்டாயமாக்கப் பட வேண்டும் என்பதே கோரிக்கை.

“பீட் புக்” என்றால் என்ன?

இதுதான் காவல்துறையின் உண்மையான “பாட்டா புக்”. ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள்ளும் உள்ள ஒவ்வொரு பீட்டுக்கும் தனி பதிவேடு உள்ளது. அதுவே பீட் புக் ஆகும்.

காவலர் ரோந்து சென்ற நேரம், இடம், சந்தித்த நபர்கள், கண்டறிந்த பிரச்சினைகள் அனைத்தும் இதில் தினமும் பதிவு செய்யப்படும். இது வெறும் புத்தகம் அல்ல, கிராமத்தின் பாதுகாப்பு குறித்த முழு ஆவணம் ஆகும்.

ரோந்து பதிவேடு & சட்டம் – ஒழுங்கு:

ரோந்து சென்ற நேரம், இடம், சந்தித்த முக்கிய நபர்கள், சந்தேக நபர்கள், சண்டை, சாலை விபத்து, சந்தேக மரணம் போன்றவை தினமும் பதிவு செய்யப்படும்.

கிராமங்களில் இரவு நேரங்களில் காவலர் வருகிறாரா? எந்த நேரத்தில் வந்தார்? என்பது இதன் மூலம் தெரிய வரும். இதனால் திருட்டு, வழிப்பறி, அடிதடி, நிலத்தகராறு, சாதி மோதல் போன்ற சம்பவங்கள் வெகுவாக குறையும்.

சந்து கடை – போதை ஒழிப்பு கண்காணிப்பு:

திறந்த கடைகள், மூடாத வீடுகள், சந்தேகத்திற்குரிய கூட்டங்கள், மது, கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கும் இடங்கள் குறித்து உடனுக்குடன் பதிவு செய்யப்படும்.

குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே சந்து கடைகளில் போதை பொருட்கள் விற்கப்படுவதை கண்காணிக்க இது மிகவும் உதவும். பீட் புக் முறையாக பராமரிக்கப்பட்டால், “எங்கள் பகுதியில் சந்து கடை இல்லை” என காவல்துறை சொல்ல முடியாது.

பெண்கள் & பெண் குழந்தைகள் பாதுகாப்பு:

பள்ளி நேரம், மாலை நேரங்களில் பெண்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள், தனிமையான சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், டியூஷன் சென்டர் அருகே ரோந்து சென்று கையெழுத்து வாங்குவதால், பாலியல் தொந்தரவு, Eve-teasing, குழந்தைகளை கடத்துதல் போன்ற குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும்.

பொறுப்புணர்வு & நீதிமன்ற ஆதாரம்:

ரோந்து அதிகாரி PC, HC ஆகியோர் பீட்டில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம், பள்ளி, கோவில், கடை வீதி, நியாய விலை கடை போன்ற இடங்களில் கையெழுத்து பெறுவார்கள். SI, Inspector, DSP ஆகியோர் திடீர் ஆய்வு செய்து சரிபார்ப்பார்கள். எந்த சம்பவம் நடந்தாலும் அந்த நேரத்தில் ரோந்து எங்கு இருந்தது என்பதற்கு இது நீதிமன்ற ஆதாரமாகும்.

புதிய தொழில்நுட்பம் – e-Beat Book:

தற்போது “e-Beat Book” App மூலம் GPS லொகேஷன் உடன் ரோந்து பதிவு செய்யப்படுகிறது. QR Code ஸ்கேன் செய்து ஆஜர் போடுவதால் போலி பதிவுக்கு வாய்ப்பே இல்லை. காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு பீட் புக் எழுதும் நிலை இனி இருக்காது.

செய்தியாளர் குழு – முதல்வருக்கு 6 கோரிக்கைகள்:

அனைத்து 2,050 காவல் நிலையங்களிலும் பீட் புக் / e-Beat Book முறையை கட்டாயமாக்க வேண்டும்.

ஒவ்வொரு பீட்டுக்கும் நிரந்தர காவலர் நியமிக்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

இரவு ரோந்து, பள்ளி நேர ரோந்து, பெண்கள் பாதுகாப்பு ரோந்து ஆகியவற்றை தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

சந்து கடை, போதை விற்பனை குறித்து பொதுமக்கள் தரும் தகவல்களை பீட் புக்கில் பதிவு செய்து, 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாதம் ஒருமுறை கிராம சபையில் பீட் புக் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ரோந்து செல்லாத, போலி பதிவு செய்யும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்?

தமிழக முதல்வர் இதற்கு நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிட வேண்டும். தமிழக காவல்துறை தலைவர் (DGP), 4 மண்டல ஐ.ஜி.க்கள், 11 சரக டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இதை கண்காணிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், ஊராட்சி நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும்.

செய்தி ஆசிரியர் இளம்பரிதி கூறுகையில்:

“பீட் புக் முறையை முழுமையாக செயல்படுத்தினால் தான் கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கும். சந்து கடை ஒழியும். போதை ஒழியும். பெண்கள், குழந்தைகள் அச்சமின்றி நடமாட முடியும். தமிழக முதல்வர் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இது கிராம மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை.”

தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்குமா? என 234 தொகுதி மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

– செய்தியாளர்கள் குழு, உள்ளாட்சி அரசு