
*அரூர், நவ. 12:*
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ராமபுரம் கிராமத்தில் இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு, வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் சுமுகத் தீர்வு காணப்பட்டது.
அரூர் வட்டம், மொரப்பூர் உள்வட்டத்திற்குட்பட்ட ஆர்.கோபிநாதம்பட்டி தரப்பு ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த போயர் சமுதாய முதியவர் ராஜமாணிக்கம் (80) என்பவர் புதன்கிழமை (நவ. 11) உயிரிழந்தார். இவரது உடலை அடக்கம் செய்வதற்காக அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் தெரு வழியாக எடுத்துச் சென்றபோது இரு தரப்பினரிடையே சட்டம் – ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜி.மனோகரன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 12) மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், மொரப்பூர் காவல் ஆய்வாளர் ரவிக்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் சிவஞானம், மொரப்பூர் வருவாய் ஆய்வாளர், பொன்னுசாமி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இரு சமூகங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
*கோரிக்கையும் தீர்மானமும்:*
கூட்டத்தில் அருந்ததியர் சமூகத்தினர் தரப்பில் பேசுகையில், “தங்களது தெரு மிகவும் குறுகலாகவும், வீடுகள் நெருக்கமாகவும் அமைந்துள்ளதால், இத்தெரு வழியாக சடலங்களை எடுத்துச் செல்லும்போது பொதுமக்களும் குழந்தைகளும் அச்சமடைகின்றனர். எனவே, எதிர்காலத்தில் இப்பாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.
இரு தரப்பினரின் கருத்துகளையும், கிராமத்தின் சட்டம் – ஒழுங்கு நிலையையும் விரிவாகப் பரிசீலித்த அதிகாரிகள், பெருமாக்குட்டை மயானத்திற்குச் செல்ல ஏற்படும் பாதைப் பிரச்சினையைத் தவிர்க்கும் பொருட்டு, விவசாய நிலம் இல்லாத குறிப்பிட்ட 20 குடும்பத்தினர் இறந்தவர்களின் உடல்களை அருகிலுள்ள சக்கியார் குட்டையில் அடக்கம் செய்ய அல்லது எரிக்கத் தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்தத் தீர்மானத்திற்கு இரு தரப்பினரும் முழு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கிராமத்தில் அமைதி திரும்பியது.














Leave a Reply