
நடுநிலைப் பள்ளிகளில் தொடரும் திருட்டு – கணினி உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் திருட்டால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிப்பு – கண்டுபிடிக்க முடியாத காவல்துறை
*அரூர், அக்.29:*
தருமபுரி மாவட்டம், அரூர் நகராட்சிக்குட்பட்ட ராயப்பன்கொட்டாய் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கணினி ஆய்வகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆய்வகத்தில் இருந்த 10 மதர்போர்டுகள், 10 ஹார்டு டிஸ்க்குகள், மெமரி கார்டுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அரூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேபோல் கடந்த வாரம் சோரியம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியிலும் கணினி உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் திருடு போயின. அதற்கு முன்பு அச்சல்வாடி, கீழானூர் அரசு மகளிர் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளிலும் கணினி சார்ந்த கல்வி உபகரணங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை என பெற்றோர்கள் மத்தியில் பேசப்படுகிறது. காவல்துறையினர் இரவு ரோந்து பணியை சரிவர மேற்கொள்ளாததே தொடர் திருட்டுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த கணினி வழி பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், கணினி உபகரணங்களை திருடிச் செல்லும் கும்பலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும், அரூர் நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் நீண்ட காலமாக இயங்காமல் இருப்பதே இது போன்ற திருட்டுகளுக்கு துணையாக உள்ளதாக கூறப்படுகிறது. சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்பதை தெரிந்து கொண்ட திருடர்கள் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விரைந்து நடவடிக்கை எடுக்குமா காவல்துறை என அரூர் பகுதி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.














Leave a Reply