Categories

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை? – வருவாய் கோட்டாட்சியர் விசாரணை



அரூர், அக்.29:

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அரூர் அருகே
செக்காம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் மோகனப்பிரியா (20). இவருக்கும், கோபாலபுரம் சர்க்கரை ஆலை அருகில் உள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த தென்னரசு என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மோகனப்பிரியா அரூரில் உள்ள தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். இதற்கிடையில் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மோகனப்பிரியா தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மோகனப்பிரியா பூச்சி மருந்து குடித்துள்ளார். அவரை உடனடியாக மீட்டு தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் உயிரிழந்ததால், அரூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.