Categories

அருந்ததியர் காலனியில் சாதி வெறி கும்பலின் இரவு தாக்குதல்:
வீட்டை நொறுக்கி, குடும்பத்தை பூட்டி தப்பிய கும்பல் -5 பேர் கைது

தர்மபுரி ஜன 30,
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், தாளநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நடூர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தினர் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



நேற்று முன்தினம்
இரவு, அருந்ததியர் இளைஞர்கள் ஜெய்சிம்மன் (25) மற்றும் சந்தோஷ் (23) தங்கள் இரு சக்கர வாகனத்தில் அருகிலுள்ள குருபரஅள்ளி கிராமத்திற்கு உணவுக்கு சென்றனர்.

வன்னியர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அய்யம்பட்டி பகுதியில் அவர்களது வாகனம் பழுதடைந்துள்ளது.

அப்போது அங்கு வந்த வன்னியர் இளைஞர் “இங்கே யாரும் இருக்கக் கூடாது” எனக் கட்டளையிட்டார்.
இதில் வாக்குவாதம் முற்ற, ஐந்து வன்னியர் இளைஞர்கள் கூடி அருந்ததியர் இளைஞர்களை சாதிப் பெயர்களால் இழிவுபடுத்தி, கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

தங்கள் வாகனத்தை மீட்டு இரவு 10 மணிக்கு நடூர் கிராமத்திற்கு திரும்பிய ஜெய்சிம்மனும் சந்தோஷும், சண்டையைப் பெற்றோருக்கு தெரிவிக்காமல் தூங்கச் சென்றனர்.

இதை அறிந்த சாதி வெறி கும்பல் – 10-க்கும் மேற்பட்டோர் – ஜெய்சிம்மன் வீட்டிற்கு வந்து “வெளியே வா சக்கிலி நாயே” என ஆபாச வார்த்தைகளால் திட்டி, கட்டை, கம்பு, இரும்பு கம்பியால் வீட்டை உடைத்தனர்.



ஜன்னல்களையும் கதவுகளையும் அடித்து நொறுக்கி, அருகில் இருந்த இரு சக்கர வாகனத்தையும் உடைத்தனர்.

“யாரும் வெளியே வரக்கூடாது” என கொலை மிரட்டல் விடுத்து, கதவைப் பூட்டிவிட்டு தப்பினர்.
அக்கம்பக்கத்தினர் வருவதற்கு முன்பே கும்பல் தப்பித்தது.

உடனடியாக கடத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து, பூட்டப்பட்ட வீட்டில் அச்சத்துடன் தவித்த அப்பாவி அருந்ததியர் குடும்பத்தினரை மீட்டனர்.

இதற்குப் பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி
தொகுதி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் நடூர் கிராமத்திற்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, கும்பலை கைது செய்ய கோரினர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் இளைஞர்கள் சந்தோஷ், சக்தி, சந்தரு, திலீபன், சூர்யா ஆகிய ஐந்துபேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாதி வெறியர்கள் தங்கள் தங்கையை கேலி செய்ததாகக் கூறி, ஜெய்சிம்மன் சந்தோஷ் மீது பொய்ப் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாதி வெறியின் இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருந்ததியர் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.