Categories

குடுமியாம்பட்டி கிராமங்கள் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு

2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம், குடுமியாம்பட்டி கிராமத்தில் நீதிமன்ற உத்தரவு இருந்தும் தார்ச்சாலை அமைக்க விடாமல் தடுத்து வரும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,



வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

நீண்ட காலப் போராட்டம்:

குடுமியாம்பட்டி முதல் செல்வசமுத்திரம் வரையிலான சாலை இப்பகுதி மக்களின் முக்கியப் போக்குவரத்துப் பாதையாக இருந்து வந்தது.

ஆனால், 1999-ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இச்சாலையை மறித்து பாதை செல்ல விடாமல் தடுத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் அவமதிப்பு:

சுமார் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2003-ம் ஆண்டு “தார்ச்சாலை அமைக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



தீர்ப்பு நகலுடன் சாலை அமைக்க அதிகாரிகள் முயற்சிக்கும் போதெல்லாம், சம்பந்தப்பட்ட நபர்கள் தார்ச்சாலை அமைக்க விடாமல் தடுத்து நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.

“அதிகாரிகளின் மெத்தனப் போக்கு:

இது தொடர்பாக 2022-ம் ஆண்டு தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வரும்போது, அவர்களைத் தகாத வார்த்தைகளால் பேசி அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

தேர்தல் புறக்கணிப்பு முடிவு:

விவசாயப் பயன்பாட்டிற்கும், பொதுமக்களின் அவசரத் தேவைக்கும் பயன்படும் இந்தப் பாதையை மீட்டுத் தரக் கோரி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டத்தைச் சேர்ந்த குடுமியாம்பட்டி கிராம மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.