Categories

20 கிராமங்கள் பாலைவனமாகும் அபாயம்-தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

20 கிராமங்கள் பாலைவனமாகும் அபாயம்-தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

தர்மபுரி, மார்ச் 22:

விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் வள்ளிமதுரை வரட்டாறு அணையைச் சிதைக்கும் வகையில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் ராட்சதக் கிணறுகள் அமைத்துத் தண்ணீர் எடுக்கும் அரசின் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



வீடுகளில் கருப்புக்கொடி, துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பாசன நீர் ‘அபேஸ்’ – விவசாயிகள் அதிர்ச்சி



தர்மபுரி மாவட்டம் அரூர் வள்ளி மதுரை அருகே உள்ள சித்தேரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வரட்டாறு அணை, 34.45 அடி கொள்ளளவு கொண்டது.
இந்த அணை மூலம் அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, ஈட்டியம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள
25 ஏரிகள் நிரப்பப்படுகின்றன.

சுமார் 6,000 ஏக்கர் நிலங்கள் இந்த நீரால் பசுமை காண்கின்றன.
இந்நிலையில்,



“கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்” கீழ் அரூர் நகராட்சிக்குத் தண்ணீர் கொண்டு செல்வதாகக் கூறி, அணையின் தடுப்பணைப் பகுதியில் ராட்சத ‘கிணறு’ (திறந்தவெளி கிணறு) அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் தி.மு.க. எம்.பி. மணி முன்னிலையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை நடத்தப்பட்டது.

திட்டமிட்ட சதி?

தற்போது நாள் ஒன்றுக்கு 19.5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய திட்டத்தின் மூலம் இதை 29.5 லட்சம் லிட்டராக உயர்த்த அதிகாரிகள் துடிக்கின்றனர்.



இதற்காக வரட்டாறு அணையின் அடிமட்ட நீரை உறிஞ்சும் வகையில் ராட்சதக் கிணறுகள் அமைக்கப்பட்டால், நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிடும்.
இதன் விளைவாக, பாசனத்திற்கு நீர் கிடைக்காமல்
20 கிராமத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்
என விவசாயிகள் குமுறுகின்றனர்.

போராட்டக் களம்:

கருப்புக்கொடி முழக்கம்
அரசின் இந்தத் தன்னிச்சையான போக்கைக் கண்டித்து, வரட்டாறு அணைப் பகுதி விவசாயிகள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்:
கருப்புக்கொடி: அணைப் பகுதி கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்புக் கொடிகள்
திட்டத்தின் பாதிப்புகளை விளக்கி ஊர் முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.

தேர்தல் புறக்கணிப்பு:

“எங்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் அரசுக்கு ஓட்டு இல்லை” எனத் தேர்தல் புறக்கணிப்புப் பலகைகளை வைக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

விவசாயிகள் ஆதங்கம்:

“கடந்த மாதம் தான் அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது. அதற்குள் இப்படி ஒரு ‘கொள்ளை’ திட்டத்தைக் கொண்டு வருவது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். மக்களின் வரிப்பணத்தில் ரூ.20 கோடியைச் செலவு செய்து, விவசாயிகளை வீதிக்குக் கொண்டு வருவதே இந்த ஆட்சியின் சாதனையா?” எனக் கொந்தளிக்கின்றனர்
அப்பகுதி மக்கள்.

அரசியல் லாபத்திற்காக விவசாயிகளின் நீராதாரம் பலிகடா ஆக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த  விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.