Categories

புகார் கொடுத்தவர் நள்ளிரவில் கைது: குடிநீர் தொட்டியை உடைத்தவர்களை கண்டுகொள்ளாத காவல்துறை – ஊத்தங்கரையில் அதிர்ச்சி



கிருஷ்ணகிரி,
ஏப்ரல். 28:_ 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு குடிநீர் தொட்டியை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதுகுறித்து புகார் அளித்தவரை நள்ளிரவில் கைது செய்த காவல்துறையின் செயல் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஊத்தங்கரை வட்டம், கே.எட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரடிகவுண்டனூர் அடுத்த திடீர்குப்பம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் பெற்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.எட்டிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரும், திமுக பிரமுகருமான பெருமாள் தலைமையில் கரடிகவுண்டனூரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திடீர்குப்பம் பகுதிக்கு திரண்டு வந்தனர்.



“நான் தலைவராக (திமுக) போட்டியிட்டபோது இங்குள்ளவர்கள் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை; அதனால் உங்களுக்கு தண்ணீர் கிடையாது” என ஆவேசமாக கூறிய பெருமாள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மினி குடிநீர் தொட்டியை அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

“கரடிகவுண்டனூர் மக்கள் மட்டுமே இந்த தொட்டியில் தண்ணீர் எடுக்க வேண்டும்; மற்றவர்கள் எடுக்கக்கூடாது” என மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதனால் திடீர்குப்பம் பகுதியில் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டு, குழந்தைகள், முதியவர்கள் உட்பட அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து முன்னாள் திமுக ஊராட்சித் தலைவரின் வீட்டுக்கு சட்டவிரோதமாக 2 அங்குல குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாகவும், சிலர் தனிப்பட்ட தொட்டிகளில் தினமும் ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் சேமிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், பொதுச் சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், புகார் அளித்தவரை நேற்று நள்ளிரவில் கைது செய்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட DYFI செயலாளர் கே.இளவரசன் கூறுகையில், “பொதுமக்களின் அடிப்படை உரிமையான குடிநீரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார்தாரரை கைது செய்வது காவல்துறையின் ஒருதலைபட்ச போக்கை காட்டுகிறது. உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்” என்றார்.

குடிநீர் தொட்டியை உடைத்தவர்களை கைது செய்யாமல், புகார் கொடுத்தவரை கைது செய்த காவல்துறையின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


அவரை கைது செய்து அழைத்துச் சென்றபோது திமுகவுக்கு எதிரான கோஷங்களை வழக்கறிஞர் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது