Categories

ஒகேனக்கல்: தூங்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கத்தாலியை பறித்த இருவர் கைது



தருமபுரி, ஏப்ரல். 27:_ 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கத்தாலியை பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரூர் மேல்பாட்ஷாபேட்டையைச் சேர்ந்த முகமது ஷெரீப்பின் மனைவி ஷம்மி, 30. இவர் ஒகேனக்கல்லில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

கடும் வெயில் காரணமாக நேற்று இரவு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு ஷம்மி உறங்கியுள்ளார். அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த ஷம்மியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தாலி செயினை பறித்துச் சென்றனர்.

திடுக்கிட்டு எழுந்த ஷம்மி சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் திருடர்களை துரத்திச் சென்றனர். ஆனால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ஷம்மி ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஒகேனக்கல் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் பாலகிருஷ்ணன், வண்ணாத்திபட்டியைச் சேர்ந்த விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து தாலி செயினை திருடியது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து இரண்டரை பவுன் தங்கத்தாலி செயினை மீட்டு ஷம்மியிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கத்தாலியை பறித்த சம்பவம் ஒகேனக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.