Categories

திமுகவினர் மீது அடுத்தடுத்து தாக்குதல்: பாமக, அதிமுகவினர் மீது புகார்



தர்மபுரி, ஏப்ரல். 27:_ 

தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக பெண் நிர்வாகி மற்றும் இளைஞரணி பொறுப்பாளர் மீது பாமக, அதிமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

*பெண் நிர்வாகி மீது கொடூர தாக்குதல்* 

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம், வாசிகவுண்டனூர் பகுதியில் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவர் அமுதா. கிளை துணைச் செயலாளரான இவரை, பாமகவினர் பெண் என்றும் பாராமல் கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த அமுதா பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

தகவலறிந்த தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர்
பி. பழனியப்பன், ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமுதாவை சந்தித்து ஆறுதல் கூறினர்.



இதுகுறித்து பழனியப்பன் கூறுகையில், “பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன. இது திமுகவினருக்கு எதிராக அதிமுக, பாமகவினர் இணைந்து நடத்திய திட்டமிட்ட தாக்குதல். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என்றார்.

*இளைஞரணி பொறுப்பாளர் மீது கொலைவெறி தாக்குதல்* 

இதேபோல், பெத்தூர் அருகே கோட்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக இளைஞரணி பொறுப்பாளர் சத்யபிரியன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ராமியம்பட்டி பகுதியில் சத்யபிரியன் வாக்கு சேகரித்தபோது, அங்கிருந்த அதிமுகவினர் “இங்கு வாக்கு கேட்டால் பின்விளைவுகளை சந்திப்பீர்கள்” என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று 4 இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த சத்யபிரியனை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

*மாவட்டத்தில் பதற்றம்* 

அடுத்தடுத்து நடந்த இந்த வன்முறை சம்பவங்களால் தருமபுரி மாவட்ட அரசியல் களத்தில் பதற்றம் நிலவுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் நடைபெற்றதால், காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.