
அரூர், மே 2: அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டி மாணவாளன் சாமி ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். எல்லப்புடையாம்பட்டி ஏரியின் கரைப் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வேடியப்பன் கோயில் உள்ளது. முத்தானூர், மாவேரிப்பட்டி, கம்மாளப்பட்டி, ஈட்டியம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, கௌôப்பாறை, கீரைப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த கோயிலுக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். மணவாளன் சாமி ஏரி மற்றும் கோயில் வளாகப் பகுதியை உள்ளூர் மக்கள் மிகவும் பயபக்தியுடன் பாதுகாப்பும், பராமரிப்பும் செய்து வருகின்றனர். மணவாளன் சாமி ஏரியில் இருந்து எல்லப்புடையாம்பட்டி கிராம மக்களுக்கு நாள்தோறும் குடிநீர் வழங்குவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், எல்லப்புடையாம்பட்டி மணவாளன் சாமி ஏரியில் மீன் பிடிப்பதற்கான டெண்டர் விடுப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக டெண்டர் எடுத்தவர் ஏரியில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து, மீன்களை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், ஏரியில் வளரும் மீன்களுக்கு உணவு பொருள்களாக கோழி உள்ளிட்ட இறைச்சிகளின் கழிவுகள், மரவள்ளி கிழங்குகளின் கழிவுகள், கெட்டுபோன முட்டைகள், மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்கள் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், ஏரியில் உள்ள தண்ணீர் மாசு அடைந்திருப்பதுடன், ஏரியின் கரைப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் புகார் கூறுகின்றனர். எல்லப்புடையாம்பட்டியைச் சேர்ந்த 1000}க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்தவும், ஏரியில் தண்ணீர் மாசு அடைவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.














Leave a Reply