
தருமபுரி, மே 2:_
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தருமபுரி வட்டம் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
*அலுவலர்கள் நியமனம்*
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 70 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பணியில் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் 70 பேர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் 70 பேர், நுண்ணாய்வு பார்வையாளர்கள் 70 பேர் என மொத்தம் 210 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், மேற்பார்வையாளர் மேசையில் கூடுதலாக 5 உதவியாளர்கள், 10 நுண்ணாய்வு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
*தபால் வாக்கு எண்ணிக்கை*
தபால் வாக்குகளை எண்ணுவதற்காக பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளுக்கு தலா 5 மேசைகளும், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளுக்கு தலா 6 மேசைகளும் என மொத்தம் 28 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக 28 மேற்பார்வையாளர்கள், 56 உதவியாளர்கள், 28 நுண்ணாய்வு பார்வையாளர்கள் என மொத்தம் 112 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
*மொத்த பணியாளர்கள்*
வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 83 மேசைகளும், 337 அலுவலர்களும் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.














Leave a Reply