Categories

கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர்கள் மன்றம் கடும் கண்டனம்.


கோவை மே 2,
2026 சட்ட மன்ற தேர்தல் முடிவுற்று நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை வழங்குவதில்
வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளதாக  கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டனத்தை தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
ஏற்கனவே, நிறுவனத்திற்கு இருவருக்கு மட்டுமே (செய்தியாளர், ஒரு போட்டோகிராபர் அல்லது வீடியோகிராபர்) தேர்தல் பணிக்கான அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த போதே, அது போதுமானதாக இருக்காது என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கும் கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் மன்றம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அதில், சென்னைக்கு அடுத்தபடியாக பெருநகரமான கோவையில், ஏராளமான ஊடக நிறுவனங்களின் கிளை தலைமையகங்கள் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டியிருந்தோம்.
இந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு அடையாள அட்டை பெற்ற பலருக்கும், தற்போது மே 4ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படாதது ஏமாற்றத்தையும், பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களின் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் எதுவும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகளால் வழங்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


அதிலும், பல யூடியூபர்கள், இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்களுக்கும் கூட வாக்கு எண்ணுக்கும் மையத்திற்குள் செல்வதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாக வரும் தகவல்கள் கவலையை ஏற்படுத்துகின்றன.
இப்படி வெளிப்படைத்தன்மை இல்லாமல் அடையாள அட்டை வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துவதோடு, உரிய ஆவணங்களை சமர்பித்து, களத்தில் பணியாற்றுகிற செய்தியாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம், இந்திய தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரை வலியுறுத்துகிறது.