அரூர் நவ 18,

சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி வழிமறித்தவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய கோரி புகார்
குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்

வழிமறித்து சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்திய நபர்கள் மீது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் பாரதிய நியாய சஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் காவாய்ப்பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
காவாய்ப்பட்டி, சர்வே எண் 7/2-ல் ஜெயக்குமார் (39) குடும்பத்தினருக்கு சொந்தமான நிலம் உள்ளது. ராசிபுரத்தில் வசிக்கும் அவர், குடும்பத்தினருடன் 16.11.2026 அன்று தனது நிலத்தை பார்வையிட வந்துள்ளார்.

சங்கிலிவாடி சாலையிலிருந்து நிலத்திற்கு செல்லும் அரசு மண் பாதை வழியாக சென்றபோது, அப்பகுதியில் வசிக்கும் முருகன், பழனி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் வழியை மறித்ததாக கூறப்படுகிறது. “நீங்கள் வெளியூர்க்காரர்கள், உங்களுக்கு இந்த வழியில் உரிமை கிடையாது, இது எங்களுடைய பட்டா நிலம்” என்று கூறி சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். மறுநாள் காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறினர்.
*2-வது முறை – காலையில்:*
17.11.2026 அன்று காலை 10.15 மணியளவில் விசாரணைக்காக அரூர் காவல் நிலையத்திற்கு காரில் சென்றபோது, அதே இடத்தில் சாலையின் குறுக்கே கட்டையை போட்டு மீண்டும் வழிமறித்ததாக புகார் கூறுகிறது. இது குறித்து காவல் கட்டுப்பாட்டு எண் 100-க்கு காலை 10.43 மணியளவில் புகார் அளிக்கப்பட்டது. புகார் பதிவு எண் 2397020.
*3-வது முறை – மாலை, இரவில்:*
அன்று மாலை காவல் நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்றவர்களை வீட்டிற்கு செல்ல விடாமல், நடுரோட்டில் கட்டை, கற்கள், டிராக்டர் உள்ளிட்டவைகளை போட்டு தடுத்து நிறுத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து அரூர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது புகார்தாரரிடம் “நீங்கள் அந்த வழியாக செல்ல வேண்டாம், காலையில் பேசிக் கொள்வோம்” என்று கூறியதாக புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தாங்கள் சென்ற காரை பேக்கரி ஒன்றில் நிறுத்திவிட்டு, இரவு நேரத்தில் குறுக்கு வழியாக நடந்தே சென்றனர்.
*வருவாய் கோட்டாட்சியர் கடிதம்:*
இதே கிராமத்தில் பெருமாள் என்பவரின் நிலத்திற்கு செல்லும் வண்டிப்பாதை பிரச்னை குறித்து ஏற்கனவே வட்டாட்சியர் விசாரணை நடத்தி, பாதையை பயன்படுத்த தடை விதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவையும் மீறி மீண்டும் பிரச்னை ஏற்படுவதாக கூறி, வருவாய் கோட்டாட்சியர் சி.செம்மலை, அரூர் காவல் துணை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














Leave a Reply