Categories

பாலக்கோடு அருகே கருவின் பாலினம் கண்டறியும் கும்பல் சிக்கியது – செவிலியர் உட்பட 2 பேர் கைது, 3 பேர் தலைமறைவு



*தருமபுரி, அக்.10-*

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மேக்லாம்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் கும்பலை, கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறையினர் மாறுவேட நடவடிக்கையில் கையும் களவுமாக பிடித்தனர்.

மைதிலி என்பவரின் வீட்டில் இந்த சட்டவிரோத செயல் நடப்பதாக மாவட்ட கலெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கலெக்டர் உத்தரவின் பேரில், தர்மபுரி மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர் பாரதி, கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ஜெகநாதன், மருத்துவர்கள் பாலசுப்பிரமணியம், சிவகுரு அடங்கிய மருத்துவக்குழுவினர் மேக்லாம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வீட்டிற்கு கர்ப்பிணிகள் வந்து செல்வதை கண்காணித்து, வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள சிசு பெண் சிசு என தெரிந்ததும் கருக்கலைப்பு செய்ய முயன்றது தெரியவந்தது. மேலும் பென்னாகரத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணியும், பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு கர்ப்பிணியும் பாலினம் கண்டறிய காத்திருந்தனர்.

இதையடுத்து சிசுவின் பாலினம் கண்டறிந்த தர்மபுரி மாவட்டம் அனுமந்தாபுரத்தைச் சேர்ந்த K.வடிவேல் (36), ரங்காபுரத்தைச் சேர்ந்த செவிலியர் S.பரிமளா (30) ஆகிய இருவரையும் பிடித்து, அவர்களிடமிருந்து ஸ்கேன் கருவிகள், மருந்துகள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர்.

மருத்துவர் பாலசுப்பிரமணியம் கொடுத்த புகாரின் பேரில் வடிவேல், பரிமளா மற்றும் புரோக்கர்களான சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த கனகவள்ளி, மேச்சேரியைச் சேர்ந்த மகாலட்சுமி மற்றும் வீடு வழங்கிய மைதிலி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வடிவேல், பரிமளா இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

*தொடர் குற்றவாளிகள்:*

வடிவேல், பரிமளா இருவர் மீதும் ஏற்கனவே தலா 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2024 நவம்பரில் பாலக்கோடு அரசு மருத்துவமனை ஸ்கேன் அறையை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஒரு ஸ்கேனுக்கு ரூ.15 ஆயிரம் வசூலித்த வழக்கில் இருவரும் தலைமறைவு குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். மருத்துவமனை ஊழியர் சகுந்தலா அளித்த தகவலின் பேரில் CCTV ஆய்வில் இது தெரியவந்தது.

அதேபோல் ரங்காபுரத்தில் செந்தில் வீட்டில் நடந்த சோதனையிலும், மகேந்திரமங்கலம் அடுத்த சிங்கேரி கூட்ரோடு பகுதியில் நடந்த சோதனையிலும் வடிவேல், பரிமளா ஆகியோர் தொடர் குற்றவாளிகள் என தெரியவந்தது.

இவர்கள் மீது PCPNDT சட்டம் 1994, BNS பிரிவுகள் 49, 323(3), 334(2), 115(2) மற்றும் 23(1), 25 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபடும் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.