Categories

இன்ஸ்டா பழக்கத்தால் விபரீதம் – 12-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் 12-ம் வகுப்பு மாணவி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளியான ராஜசேகர் (28) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய ராஜசேகர், புதுச்சேரிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பிய மாணவி, கடந்த 4-ம் தேதி நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கிய பின் வீட்டை விட்டு வெளியேறி, பஸ் மூலம் புதுச்சேரிக்கு சென்று ராஜசேகரை சந்தித்துள்ளார்.

இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தபோது, மாணவியிடம் ராஜசேகர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தந்தை பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போலீசார், செல்போன் எண்ணை வைத்து மாணவியின் இருப்பிடத்தை கண்டறிந்து, புதுச்சேரிக்கு சென்று மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ராஜசேகரை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.