Categories

செக்கோடி சமத்துவபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் 100 பெண்கள் சாலை மறியல்!



தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த செல்லியம்பட்டி ஊராட்சி, செக்கோடி சமத்துவபுரத்தில் குடிநீர் வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செக்கோடி சமத்துவபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு இதுவரை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை. இதனால் உப்புத் தண்ணீரையே பயன்படுத்தி வந்துள்ளனர். காந்தி ஜெயந்தி அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்கக் கோரி மனு அளித்துள்ளனர். மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைத்து சீராக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காலி குடங்களுடன் பாப்பாரப்பட்டி – தருமபுரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பி.டி.ஓ. லோகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி செயலாளர் சுமதி, குடிநீர் பிரச்சினை குறித்து தனக்கு தெரியவில்லை என்றும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் பாப்பாரப்பட்டி – தருமபுரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செக்கோடி சமத்துவபுரத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.