
கோவை மே 26,
சூலூர் பகுதியில் நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள புதிய வழிபாட்டுத் தலங்களை அகற்றி, கால்வாய்களை உடனடியாகத் தூர்வாரக் கோரி “கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்” சார்பில் சூலூர் வட்டாட்சியர், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன் மற்றும் பேரூராட்சி செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இது குறித்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த ரவிக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, கோவை மாவட்டம் சூலூர் தாலுக்கா செங்கத்துறை செல்லும் வழியில் சூலூர் பெரியகுளம் மற்றும் சின்ன குளத்தின் உபரி நீர் வாய்க்கால் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த உபரி நீரானது ராமச்சந்திரா குளம் மற்றும் செங்கத்துறை தடுப்பணைக்குச் செல்கிறது என்றும், சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளுக்கு இந்த குளங்களும் தடுப்பணையும்தான் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ராமச்சந்திரா குளம் மற்றும் தடுப்பணைக்குச் செல்லும் நீர் வழிப்பாதையான வாய்க்காலைச் சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். வாய்க்காலின் மேல் பகுதியை உடைத்துச் சமன் செய்து, ‘நாங்கள் வழிபாடு செய்கிறோம்’ எனக் கூறிக்கொண்டு புதிய வழிபாட்டுத் தலங்களை அமைத்து ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளனர் என்றும், இந்த நிலை நீடித்தால் வரும் காலங்களில் நீர் வழிப்பாதையான வாய்க்கால் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் கவலை தெரிவித்தார். இதனால் பெருமழை காலங்களில் உபரி நீர் சீராக வெளியேற முடியாமல் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உருவாகியுள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.
எனவே, வரவிருக்கும் பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வட்டாட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர் ஆதாரமாக உள்ள இந்த வாய்க்காலைத் தூர்வாரி, அதன் கரைகளின் உயரத்தை முன்பு இருந்த அளவிற்கு உயர்த்தி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், அழிவின் விளிம்பில் இருக்கும் நீர் வளங்களையும், விவசாயத்தையும் பாதுகாக்க உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














Leave a Reply