Categories

திருவண்ணாமலை – அரூர் நான்கு வழிச்சாலை பணி கிடப்பில்: வி.சி.க.வினர் கை, கால் கட்டுடன் நூதன சாலை மறியல்



*தருமபுரி, செப்.24-*

திருவண்ணாமலை – தருமபுரி நான்கு வழிச்சாலை திட்டத்தில் தீர்த்தமலை, அரூர் பகுதிகளில் பணிகள் பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கை, கால்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை முதல் தருமபுரி வரையிலான 70 கி.மீ தூர நெடுஞ்சாலை, இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், தீர்த்தமலை முதல் பொய்யப்பட்டி வரை சுமார் 3 கி.மீ, செல்லம்பட்டி முதல் அரூர் நாசன்கொட்டாய் வரை 2 கி.மீ, நரிப்பள்ளி முதல் இ.பி.தண்டா வரை 1.5 கி.மீ தூரம் என பகுதி பகுதியாக சாலை போடாமல் தோண்டப்பட்ட நிலையிலேயே கிடப்பில் உள்ளது.



இதனால் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் குழிகளில் விழுந்து விபத்துக்குள்ளாவதாகவும், இதுவரை 80-க்கும் மேற்பட்ட விபத்துகளில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இன்று தீர்த்தமலையில் வி.சி.க. மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு, கை, கால்களை கயிற்றால் கட்டிக் கொண்டு திருவண்ணாமலை – அரூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 15 நாட்களுக்குள் பணிகளை முடித்துத் தருவதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.