Categories

கோவை ராயல் கேர் மருத்துவமனையில் “இதய அவசர சிகிச்சை ” குறித்த மாபெரும் மருத்துவப் பயிலரங்கம் நடந்தது.



இதய அவசர நிலைகளில் நோயாளிகளின் பாதிப்புகளை விரைந்து கண்டறிந்து, உரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்குவதன் மூலம் உயிரிழப்புகளைக் குறைப்பது குறித்து மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் இந்திய அவசர மருத்துவச் சங்கம் இணைந்து நடத்திய இதய அவசர சிகிச்சை மருத்துவப் பயிலரங்கம் மற்றும் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி கோவை ராயல் ஃபோரம் அரங்கில் நடைபெற்றது.



ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க. மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்திய அவசர மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீநாத் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இருவரும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, இதய அவசர சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் க. மாதேஸ்வரன், இதய நோய்களால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உடல்நிலையைத் துரிதமாகக் கண்டறிந்து, தாமதமின்றி சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம் எனத் தெரிவித்தார். குறிப்பாக, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இதயப் பாதிப்புகளின்போது மருத்துவர்கள் விரைவாகவும், துல்லியமாகவும் முடிவெடுத்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மேலும், இதய அவசர நிலைகளைக் கையாளும் மருத்துவர்களின் திறன்களை மேம்படுத்தவும், நவீன மருத்துவச் சிகிச்சை முறைகள் மற்றும் நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், இதய நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கவும் இத்தகைய பயிலரங்குகள் உதவும் எனக் குறிப்பிட்டார்.

மாரடைப்பு, இதயத் துடிப்பில் ஏற்படும் சீரற்ற நிலைகள், இதயத் தடுப்பு மற்றும் பெருநாடி தொடர்பான அவசரப் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ அவசர நிலைகளைக் கண்டறிந்து கையாள்வது குறித்து அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பயிற்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இந்திய அவசர மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீநாத் குமார் சிறப்புரை ஆற்றினார்.
ராயல் கேர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் கண்ணன் தங்கவேலு, திவ்யா, கமலகண்ணன், ராஜ் விஷ்ணு, அகிலன் மற்றும் இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும், மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பி. பரந்தாமன், தலைமைச் செயல்பாட்டு அலுவலர் டாக்டர் மணிசெந்தில்குமார் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் மூத்த பொது மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

இதய அவசர நிலைகளில் விரைவான நோயறிதல், தகுந்த சிகிச்சை மற்றும் மருத்துவர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த மருத்துவப் பயிலரங்கம் நடைபெற்றது.