
தர்மபுரி டிச 10,
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான காவல்துறையினர்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தவரை அடையாளம் கண்ட போலீசார், அவரை கொலை செய்ததாக மூவரை கைது செய்துள்ளனர்.
ஒகேனக்கல் ஆலம்பாடி அருகே காவிரி ஆற்றில் கைகள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம் மிதந்து வந்து கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், இறந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி ருத்ராட்சராவ் (35) என்பது தெரியவந்தது.
அவர் ஒரு பெண்ணை கேலி செய்த விஷயத்தையும், கொடுக்கல் வாங்கல் தகராறும் காரணமாக பெண்ணின் உறவினர்கள் அவரை ஆத்திரத்தில் கொலை செய்திருப்பது பின்னர் தெரியவந்தது.
இதனை அடுத்து, கேரட்டியைச் சேர்ந்த முருகேசன் (49), ஒகேனக்கல் இந்திராநகரை சேர்ந்த நாகராஜ் (45), சாணார் கொட்டாயைச் சேர்ந்த மூர்த்தி (35) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த 5ஆம் தேதி ருத்ராட்சராவை ஒகேனக்கலுக்கு அழைத்து வந்து, ஆலம்பாடி அடுத்த நீலகிரி தோப்பில் நால்வரும் சேர்ந்து மது அருந்தியதாகவும், பின்னர் மூவரும் சேர்ந்து ருத்ராட்சராவை கழுத்தை அறுத்து கொலை செய்து கைகளை கட்டி காவிரி ஆற்றில் வீசியதாகவும் தெரியவந்தது.
இந்த சம்பவம் ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














Leave a Reply